கர்நாடகத்தில், உள்ள பிரபல மடங்களில் சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம் ஒன்று. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடத்தில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரதுர்கா முருக மடத்தில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, 1½ வருடத்திற்கும் மேலாக பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூருவில் இருக்கும் சமூக சேவை அமைப்பில் இதுகுறித்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்புகொண்டு மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறினர். எனவே குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மைசூரு நஜர்பாத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சித்ரதுர்காவில் இருக்கும் அக்கமாதேவி வஸ்தி நிலையத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளையும் காவல்துறையினர் மீட்டு, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த பாலியல் வழக்கை மைசூரு நஜர்பாத் காவல்துறையினர், சித்ரதுர்கா காவல் துறைக்கு மாற்றி உள்ளனர். இதுதொடர்பாக சித்ரதுர்கா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.