பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறும் போதெல்லாம் அதனை ஏதோ அன்றாடம் நடைபெறும் ஒரு சம்பவங்களாக தான் தற்போது நாம் கருத முடிகிறது.ஏனென்றால் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை பார்த்து, பார்த்து இறுகிப்போன மக்களின் மனதில் இந்த சமூகத்தின் மீது ஒருவித வெறுப்பு ஏழத் தொடங்கி இருக்கிறது.
சென்ற வருடம் சென்னை வேப்பேரி பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை 46 வயதான அவருடைய உறவினர் ஒருவர் கடைக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் கர்ப்பமான சிறுமி இது தொடர்பாக அவருடைய சித்தியிடம் கூறியுள்ளார்.
அந்த சிறுமியின் சித்தி வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியின் உறவினரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம் ராஜலட்சுமி முன்பாக நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டிஜி கவிதா ஆஜராகி வாதம் செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.