தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
ஆனாலும் காவல்துறையின் சார்பாக இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.
அந்த வகையில், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தன்னுடைய ஆண் நண்பருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று, 2 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அந்த 2 நபரையும் கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறார்கள். சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 தொழில் பூங்காக்கள் இருக்கின்றன. இந்த தொழில பூங்காக்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் என்று பல ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று முன்தினம் ஒரு புகாரை வழங்கி இருந்தார்.
2 நாட்களுக்கு முன்பாக தன்னுடைய ஆண் நண்பருடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தேன். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட அந்த பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.