கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜ் (30) பொறியியல் பட்டதாரி ஆன இவர் வேலை தேடி வந்தார். இவர் கடந்த 15/12/2021 அன்றைய தினம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த தீபக் உள்ளிட்டோரை அணுகியுள்ளார். அப்போது அவர்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவரை நம்பிய விஜயராஜ் முன்பணமாக 50,000 ரூபாயை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் கூறிய வங்கி கணக்கு எண்ணுக்கு 9.5 லட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார். சில மாதங்கள் கடந்த பின்னரும் கூட வேலை வாங்கி தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக விஜயராஜ் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். காவல் துறையினர் பெரியசாமி, பழனிவேல், தீபக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய் அவர்களை தேடி வந்தனர், இத்தகைய நிலையில், ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவருடைய வீட்டில் இருப்பது தெரியவந்தது. ஆகவே நேற்று அதிகாலை அங்கு சென்ற திட்டக்குடி நகர காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.