தற்போது சமூகத்தில் தவறு நடப்பது என்பது சகஜமான விஷயம் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. ஆனால் அந்த தவறு செய்பவர்கள் யார்? என்று பார்த்தால் சற்றே நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது.
சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களே தவறு செய்தால் என்ன செய்ய முடியும்?
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் சென்ற 2️ நாட்களுக்கு முன்னர் இரவு சுமார் 11 மணியளவில் சேலம் மத்திய சிறைச்சாலை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்குச் சென்ற சேலம் மாநகர காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தப் பெண் இந்த சிறைச்சாலையில் பணிபுரியும் ஒரு வார்டன் தன்னை காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருப்பதாகவும் கூறியதோடு, 2 வார்டன்கள் தன்னை தவறாக படம் எடுத்து வைத்துக்கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன காவல்துறையினர், தற்சமயம் தாங்கள் பத்திரமாக வீட்டுக்கு சென்று விட்டு, நாளை காலை அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து தங்களுடைய புகாரை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு தெரிவித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தான் நேற்று காலை அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த அந்த இளம் பெண் ஒரு புகார் மனுவை வழங்கினார்.
அந்தப் புகார் மனுவில் அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்ததாவது, சென்ற 6 மாதங்களுக்கு முன்னர் சேலம் மத்திய சிறைச்சாலை முன்பாக நான் நின்று கொண்டிருந்தபோது, வார்டன் ஒருவருடன் பழக்கம் உண்டானது எனவும் அதன் பிறகு முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அவருடன் நட்பாக பேசி, பழகி வந்தேன். இந்த நிலையில், அந்த வார்டன் திடீரென்று ஒரு நாள் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தன்னை காதலிப்பதாக தெரிவித்து, தன்னிடம் உல்லாசமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த வார்டனுடன் உல்லாசமாக இருப்பதை மறைந்திருந்து பார்த்த மற்றொரு வார்டன் அங்கு வந்து தன்னை மிரட்டி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். தன்னிடம் உல்லாசமாக இருக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, அந்த காட்சியை வைத்து மிரட்டி, அடிக்கடி உல்லாசமாக இருப்பதற்கு அழைக்கின்றார்.
ஆகவே அந்த இரு சிறைக்காப்பாளர்களையும் கைது செய்து ஆபாசமாக எடுத்த வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சேலம் மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் 2ம் நிலை சிறைகாப்பாளர்களான அருண் மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட 2 பேரையும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், அருண் மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட இரு சிறை வார்டன்களும் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆகவே அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை சிறையிலடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.