கேரள மாநிலத்தில் திருச்சூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் தனக்கு கஞ்சா வேண்டும் என்றும், மேலும் கஞ்சா எங்கே கிடைக்கும் என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். அதற்கு ஒரு வாலிபர் கோதமங்கலத்தில் கஞ்சா கிடைக்கும் கூறியுள்ளார். மேலும் கஞ்சாவை எப்படி பயன்படுத்துவது என்று செயல் விளக்கம் கொடுத்து அதை வீடியோவாக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இவர்கள் இருவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. எர்ணாகுளம் மாவட்ட கமிஷனர் அலுவலகத்திற்கு புகார்கள் குவிந்தன. இதனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மட்டான்சேரி அருகேயுள்ள புத்தன்புரா வீட்டைச் சேர்ந்த அகஸ்டின் என தெரிந்தது. அவரை எர்ணாகுளம் கலால் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் சோதனை செய்ததில் மூன்று கிராம் கஞ்சா கிடைத்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அகஸ்டினை எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர், இந்த வீடியோ தவறான நோக்கத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும். கஞ்சா கிடைக்கும் வழிகள் அனைத்தும் முற்றிலும் முடக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இது போன்ற தவறான வழிகளை இளைஞர்கள், இளம்பெண்கள் பின்பற்றக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.