பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்கசந்திரா பகுதியில் பவர்லால் என்பவர் நகைக்கடை மற்றும் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்து கடையில் வேலை செய்யும் தர்மேந்திரா என்பவர் கடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு நகை வாங்குவது போல இரண்டு பேர் வந்து நகைகளை பார்த்து கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து கடைக்கு மேலும் இரண்டு பேர் வந்தனர். நகை வாங்க வந்தவர்கள் போல கடைக்குள் வந்த அவர்கள் துப்பாக்கி முனையில் தர்மேந்திராவை மிரட்டி தர்மேந்திராவின் கை, கால்களை கட்டி போட்டு விட்டு,லாக்கரில் இருந்த 3½ கிலோ தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் பவர்லால் கடைக்கு வந்து பார்த்த போது தர்மேந்திராவின் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பவர்லால், தர்மேந்திரா கை, கால்கள் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து அவரை விசாரித்தார்.
அப்போது நகைக்கடையில் கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எலெக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினர் அங்கு சென்று தர்மேந்திரா, பவர்லாலிடம் விசாரித்தனர். அப்போது ரூ.1.93 கோடி மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பவர்லால் அளித்த புகாரின்பேரில் எலெக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்