ஏழையோ அல்லது பணக்காரரோ யாராக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி இருக்கத்தான் செய்யும். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மனிதர்களை விட நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அந்த செல்லப்பிராணிகள் சில நேரங்களில் செய்யும் செய்லகளைப்பாத்தால் மனிதர்களை மிஞ்சுமளவிற்கு இருக்கும்.
கிராமமோ அல்லது நகரமோ எந்த பகுதியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரே செல்லப்பிராணி நாய் தான். நாய் என்பது நன்றியுள்ள ஜீவன் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், அது அனைத்தும் அனுபவபூர்வமாக சொல்லப்பட்டது என்பதை தற்காலத்து மனிதர்கள் உணர்ந்து வருகிறார்கள்.
நமக்கு ஒரு ஆபத்து என்றால் உறவினர்களும், உடன் பிறந்தவர்களும் கூட பெரிய அளவில் துடிக்க மாட்டார்கள். ஆனால் நாம் வீட்டில் வளர்த்த செல்லப்பிராணியான நாய், நமக்கு ஏதாவது ஒரு சிறிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கலங்கிப் போய்விடும்.
இந்த நாய் வீடுகளுக்கு மட்டும் செல்ல பிள்ளை இல்லை நாட்டிற்கும் செல்லப்பிள்ளை தான் என்று சொல்லுமளவிற்கு நாட்டிற்கும் இந்த நாய்களின் சேவைகள் இருக்கத்தான் செய்கின்றன.அதாவது காவல்துறையில் பல படிப்புகளையும் படித்துவிட்டு பொறுப்புக்கு வந்த போலீசாரால் கூட கண்டுபிடிக்க முடியாத பல நுணுக்கமான விஷயங்களை காவல்துறையில் இருக்கும் மோப்பநாய் கண்டுபிடித்து விடும்.
அந்த வகையில், சென்னை காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் தோனி என்ற மோப்பநாய் கடந்த மே மாதம் 2ம் தேதி ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அன்று பிறந்து 45 நாட்களே தோனி காவல்துறை மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. சிறந்த துப்பறிவாளராக தோனி பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
பல கொலை, கொள்ளை மற்றும் திருட்டு என்று 35 வழக்குகள் விசாரணைக்கு தோனி உதவியாக இருந்திருக்கிறது. கடந்த 2017 ஆம் வருடத்தில் மாநில அளவில் காவல்துறையில் திறன் போட்டியில் பங்கு பெற்று தோனி வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறது. 2020 ஆம் வருடத்தில் கெனல் கிளப் மீட்டில் 2ம் இடம் பிடித்தது. இந்த நிலையில் இருதய கோளாறு ஏற்பட்டு தோனி நேற்று முன்தினம் உயிரிழந்தது.
இதனையடுத்து ஆவடி காவல்துறை ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் தோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்து பேசினார். பயிற்சியாளர், தலைமை காவலர் தனசேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 2832 மலர் தூவி மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தோனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.