உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தின் சகோதரிகள் இரண்டு பேரின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ஆறாவது நபராக கைது செய்யப்பட்ட சோட்டு என்பவர், அந்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர். சேட்டு என்பவர் தான் மற்றவர்களிடம் அந்த சகோதரிகளை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த இரு சிறுமிகளையும் பக்கத்தில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், லக்கீம்பூரில் பட்டப்பகலில் சிறுமிகளான தலித் சகோதரிகள் இரண்டு பேர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது துயரமளிக்க கூடிய விஷயம். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை சிறையில் இருந்து விடுவித்து, மரியாதை செய்பவர்களிடம் இருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் வருடம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட வன்முறை மற்றும் மதக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற 21 வயது கர்ப்பிணி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பானுவின் உறவினர்கள் 17 பேரில் பில்கிஸ் பானுவும், ஆண் ஒருவரும், ஒரு குழந்தை என மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். மற்றவர்கள் வன்முறைக்கு பலியாகினர். இந்த சம்பவத்தில் கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டன.