மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகாதேவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மகாதேவன் அவரது மனைவி அமுதாவிடம் காசு வாங்கிக் கொண்டு போய் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது மூத்த மகன் ராஜராஜசோழன் (17) தட்டிக்கேட்டுள்ளார். அப்போது மகாதேவன் மதுபாட்டிலை உடைத்து ராஜராஜசோழனின் வயிற்றை கிழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவரது மனைவியையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த அவரது மனைவி அமுதா, அவரது கையில் இருந்த அரிவாளை பிடுங்கி மகாதேவனை கழுத்தில் வெட்டி உள்ளார்.
இதில் மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அமுதா தன் மகனை அழைத்துக்கொண்டு மணல்மேடு காவல் நிலையம் சென்று கணவனை கொன்று விட்டதாகக் சொல்லி சரணடைந்துள்ளார். இதையடுத்து, மணல்மேடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.