கும்பகோணம் பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இருவர் தங்க நகைகள் வாங்குவதைப் போல கடை உரிமையாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உரிமையாளர் மற்றும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி விட்டு பணம் வைக்கும் பெட்டியில் இருந்த 134 கிராம் தங்க நகைகளை அவர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் கடையை விட்டு சென்று சற்று நேரத்திற்கு பிறகு பணப்பெட்டியில் இருந்த நகைகள் காணாமல் போனது தொடர்பாக அறிந்து கொண்ட கடை உரிமையாளர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த 2 நபர்கள் நகைகளை திருடிய விவரம் தெரிய வந்தது.
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் கும்பகோணம் பெரிய கடை வீதியில் பட்ட பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது.