திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டு மனை பட்டா, வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து மனுக்கள் மீதான உரிய விசாரணையை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அப்போது அங்கு மனுகொடுக்க வந்து காத்திருந்த விவசாயி ஒருவர் திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாவட்ட ஆட்சியர் உடனே தரையில் அமர்ந்து கொண்டு, மனுவை வாங்கிக்கொண்டு காலில் எல்லாம் விழக்கூடாது எனவும், இதுபோன்ற செயல்களை எப்பொழுதும் செய்யக்கூடாது என்று, தரையில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து அவரிடம் பரிவுடன் விசாரித்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் தரையில் அமர்ந்ததால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தனர்.