வடமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வட மாநில இளைஞர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் முக்கால்வாசி தமிழகத்தை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விட்டதாக சில குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
அந்த வகையில், திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வட மாநில தொழிலாளியின் பிணம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து சக தொழிலாளர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு உண்டானது.
திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த சஞ்சீவ் குமார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டார். சஞ்சீவ் குமார் தொடர்வண்டியில் அடிபட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், சஞ்சீவ் குமாரின் கைபேசி உள்ளிட்டவற்றை காணவில்லை எனவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஒன்று கூடினர். ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையம் முன்பு வட மாநில தொழிலாளர்கள் ஒன்று கூடியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.