பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும்.
வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு சில வருடங்களில் தம்பதிகளுக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை கடந்து வருபவர்கள் மட்டும் தான் வாழ்வில் நிலையான வெற்றியை பெற முடியும். அப்படி இல்லை என்றால் நிச்சயமாக திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்காது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர்ப்பகுதி கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் ஜனார்தனன்(28). இவர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் இவருக்கும் கௌசல்யா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 2️ வருடங்களுக்கு முன்னர் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த தம்பதியினருக்கு 1 வயதில் கிருத்திகா என்ற மகள் இருக்கிறார். குழந்தை பிறந்ததை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே தொடர்ந்து குடும்ப பிரச்சனையின் காரணமாக, தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே பேசி சமாதானம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மறுபடியும் ஜனார்த்தனனுக்கும், கௌசல்யாவுக்கும் இடையே தகராறு உண்டாகி உள்ளது. இந்த தகராறு பூதாகரமாக வெடிக்க, தன்னுடைய மனைவி கௌசல்யாவை ஜனார்த்தனன் அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கௌசல்யா அம்மாவிடம் தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு கூறியதாக சொல்லப்படுகிறது.
தன்னுடைய மகள் வருத்தப்படுவதை தாங்க முடியாத கௌசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி, கௌசல்யாவின் வீட்டிற்கு சென்று தன்னுடைய மருமகனிடம் பேசி சமாதானம் செய்து வைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் மறுபடியும் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதில் மனமுடைந்த கௌசல்யா தன்னுடைய குழந்தை கிருத்திகாவை தன்னுடைய தாயை ராஜேஸ்வரியிடம் கொடுத்துவிட்டு, நீராடுவதற்கு செல்வதாக சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.
கௌசல்யா வீட்டிற்குள் சென்று நீண்ட நேரமான பிறகும் கதவை திறக்காததால் ராஜேஸ்வரி சந்தேகமடைந்திருக்கிறார். ஆகவே கதவை தட்டி பார்த்தபோது எந்த விதமான பதிலும் இல்லை. இந்த நிலையில், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ளிட்டோரிடம் தெரிவித்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கே கௌசல்யாவின் தாயார் ராஜேஸ்வரிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, கௌசல்யா தன்னுடைய புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனை கவனித்த உறவினர்கள் மற்றும் கௌசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக கௌசல்யாவை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் கௌசல்யாவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்திருக்கிறது.
இதன் பின்னர் கௌசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக கௌசல்யாவின் தாயாரான ராஜேஸ்வரி வழங்கிய புகாரினடிப்படையில் செய்யாறு துணை காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
திருமணம் நடைபெற்று இரண்டு வருடங்களேயான நிலையில், கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் அது தொடர்பாக செய்யாறு உதவி ஆட்சியர் அனாமிகா மேற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறார். இளம் பெண் திருமணமாகி 2 வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செய்யாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.