கடந்த 14 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது உசேன் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெரிய நீலாங்கரை குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்த அவருடைய காதலியுடன் கடற்கரையில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று இந்த காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி, மிரட்டி அவர்களுடைய 2 கை பைகளையும் பிடுங்கி அதில் பணம் இருக்கிறதா என்று பரிசோதித்தது. அதில் பணம் எதுவும் இல்லாத நிலையில், அவர்களுடைய செல்போனை வாங்கி போன் பே மூலமாக 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முகமது உசேன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போன் பே மூலமாக பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்து பள்ளிக்கரணை சார்ந்த ஊசி உதயா என்ற உதயகுமார்(25), விக்னேஷ்(27) உள்ளிட்ட இருவரை கைது செய்த நீலாங்கரை தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து 20000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக இருக்கின்ற நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.