தற்போது இளம் பெண்கள் எந்த விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருப்பதில்லை. எதிலும் ஏனோ, தானோ என்று எந்த விஷயமாக இருந்தாலும் செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் அதன் பின்விளைவு மிகவும் மோசமாக இருக்கிறது.
அந்த விதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக பரிசு பொருட்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் தெரிவித்து, நம்ப வைத்து 10 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்த சைபர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த பெண் வழங்கி புகாரின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த சதீஷ்குமார் அம்மான் கான் உள்ளிட்ட இரண்டு இளைஞர்களை அதிரடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இணையதளம் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அந்த மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் தான் மொபைல் போன் அழைப்பின் மூலமாக மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிliருந்து இலவசமாக பரிசுப் பொருட்களை தருவதாக தெரிவித்து நம்ப வைத்து சுங்கத்துறை கட்டணம் மற்றும் வருமான வரி கட்டணங்கள் கட்டுவதற்காக பணம் செலுத்த வேண்டும் என பல்வேறு கட்டங்களாக 9 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத சைபர் மோசடி நபர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அவர்களிடம் புகார் மனுவை வழங்கினார்.. இந்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினரின் தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது உத்திரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(23) மற்றும் அமான் கான்(19) என்ற விவரம் தெரியவந்தது.
உடனடியாக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு விரைந்த சைபர் க்ரைம் காவல்துறையினர், எட்டாவா மாவட்டத்திற்கு சென்று 2 குற்றவாளிகளையும் கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து, அதன் பிறகு அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.
அத்துடன் அவர்களை மேலும் காவலில் எடுத்து, இதுபோன்ற குற்ற சம்பவங்களில் அவர்கள் தமிழக அளவில் ஈடுபட்டிருக்கிறார்களா? பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் உள்ளனரா? என்பது தொடர்பாக விசாரணை செய்ய சைபர் கிரைம் காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள்.