ராஜஸ்தானில் வினோத வழக்கு ஒன்று வந்துள்ளது. சன்சி நாடோடி சமூகத்தினர் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கின்றனர். இதில், அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் இருக்கிறார் என்று நம்பப்படும். ராஜஸ்தானில் இப்படி ஒரு சமூக நடைமுறை குகடி பிரடா என்ற பெயரில் நடந்துவருகிறது.
இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்தனர். அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டுகின்றனர் என தெரிவித்து இருக்கிறார். அவருக்கு பகோர் நகரில் கடந்த மே 11-ஆம் தேதி கல்யாணம் நடந்துள்ளது. அதன்பிறகு, அதே நாளில் அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தோல்வி அடைந்தால், 10 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையை மணமகன் குடும்பத்தினருக்கு தர வேண்டும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கன்னித்தன்மை சோதனை மதியம் நடந்து, அதில் அந்த பெண் தோல்வி அடைந்ததும், இரவு வரை மணமகன் வீட்டாரின் விவாதம் நடந்துள்ளது. பயத்தில் அந்த பெண் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை கணவர் மற்றும் உறவினர்கள் அடித்துள்ளனர். அந்த பெண் கல்யாணத்திற்கு முன் பக்கத்து வீட்டு நபரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு பற்றி தெரிந்ததும், மேலும் கன்னித்தன்மை சோதனையில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த விவகாரத்தை உள்ளூர் பஞ்சாயத்துக்கு எடுத்து சென்றனர். மே 31-ஆம் தேதி கோவிலில் நடந்த ஊர் பஞ்சாயத்தில், பொதுமக்கள் முன்னிலையில், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்பிறகு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் தனது கணவர், உறவினர்களுக்கு எதிராக துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை கொடுமை என அந்த பெண் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துணை சூப்பிரெண்டு சுரேந்திர குமார் கூறும்போது, அந்த பெண்ணின் மாமனார் தலைமை கான்ஸ்டபிளாக உள்ளார். சம்பவம் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். இந்நிலையில், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பெண்ணின் நன்மதிப்புகளை சீர்குலைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் மணமகன் வீட்டார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.