தமிழகத்தில் பாஜக சமீப காலமாகத்தான் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு அந்த கட்சியை சார்ந்தவர்களே முட்டுக்கட்டையாக இருப்பது தான் பாஜகவின் மாநில தலைமைக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தியாக இருக்கிறது.
அந்த கட்சியை சார்ந்த கே டி ராகவன் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் தான் அந்த கட்சியைச் சார்ந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் ஆறு மாத காலங்களுக்கு பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநில தலைமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேறினார். அவருடைய ராஜினாமா கடிதத்தை சமீபத்தில் பாஜக மாநில தலைமை ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், காயத்ரி கிராமம் தன்னுடைய வலைதள பதிவில் பெண்களுக்கு மரியாதை சம உரிமை உள்ளிட்டவை இல்லாத தமிழக பாஜகவிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அண்ணாமலை மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். சில தினங்களுக்கு முன்புதான் அவருடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் சமூக வலைதள பதிவில் அவர் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் பாஜக பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காததற்காகவும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியிருக்கிறார்.
யார் வேண்டுமானாலும் தன்னுடன் இந்த நடைபயணத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும், எந்த வித அச்சுறுத்தலுக்கும் தான் பயப்பட போவதில்லை என்றும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு இருக்கிறார். அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்த நடைப்பயணம் நடத்தப்படுவதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.