fbpx

வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக, தொடர்மழை பெய்து வந்தது.இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9ம் தேதி புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் கூட ஓரிரு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.

தற்சமயம் சற்றே மழை இடைவேளை விட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது மழை தொடர்பான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்ககடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 3 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வரும் 20ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதே போன்று வரும் 21ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் அநேக பகுதிகளிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு என்னவென்றால் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் இருந்து 25 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கலாம்.

அதேபோல இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியிலும் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அதோடு இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும்.

அதேபோல வரும் இருபதாம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் ,வேகத்திலும் வீசலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் மனமுடைந்த பெண் தற்கொலை !

Sun Dec 18 , 2022
சமயபுரம் அருகே தாளாக்குடி அம்மன் நகரை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பத்மப்பிரியா(36). இந்த நிலையில், சண்முகவேல், பத்மபிரியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பேஷன் டிசைனர் ஆன பத்மப்பிரியா திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் பத்மப்ரியாவிற்கு தொழிலில் வளர்த்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரும் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய பல்வேறு விதத்தில் முயற்சி செய்திருக்கிறார். […]

You May Like