தமிழகத்தில் பருவ மழை காலம் அனைத்தும் முடிவடைந்து விட்டது. தற்போது தை மாதம் நடைபெற்று வருவதால் எல்லோரும் விதை விதைத்ததில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விவசாயிகளின் நெஞ்சில் இடியை இறக்கும் கதையாக தற்போது மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது வரும் 8ம் தேதி வரையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு குறைந்து தெற்கு நோக்கி நகர்வதாகவும், அது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீச கூடும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காரைக்கால் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பிப்ரவரி மாதம் 3ம் தேதியான இன்று மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதே போல திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.