குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா உள்ளிட்ட பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம் பாட்டி காலத்தில் பருப்பு, தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அது தான் ஆரோக்கியமானதும் கூட. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.
காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த தவறுகின்றனர். இதன் விளைவாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், மீண்டும் பழைய பழக்கங்களை கொண்டு வர வேண்டும்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – 250 கிராம்
பூசணி விதை – 50 கிராம்
ஜாதிக்காய் – 2
அமுக்கரா கிழங்கு – 100 கிராம்
சுக்கு – 1 துண்டு
ஏலக்காய் – 2
முருங்கை பருப்பு – 50 கிராம்
பனங்கிழங்கு – 5
குதிரைவாலி – 250 கிராம்
சோயா – 200 கிராம்
வர பட்டாணி – 50 கிராம்
வேர்க்கடலை – 250 கிராம்
பார்லி அரிசி – 200 கிராம்
பச்சை பயறு – 200 கிராம்
பாதாம் பருப்பு – 250 கிராம்
செய்முறை:
* மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பனங்கிழங்கு, ஏலக்காய் தவிர்த்து இதர பொருட்களை வெயிலில் நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.
* பனங்கிழங்கை மட்டும் இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.
* பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெயிலில் உலர்த்திய அனைத்து பொருட்களையும் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் போது, கருகிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
* இந்த பொருட்களை சூடு ஆறும்படி விட்டு பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு, அதில் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும். இதை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆற விட்டு ஈரமில்லாத பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
* ஒரு கிண்ணத்தில் அரைத்த ஊட்டச்சத்து பவுடர் 2 தேக்கரண்டி அளவு கொட்டி 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் கரைத்த ஊட்டச்சத்து பவுடரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
* பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த ஊட்டச்சத்துமிக்க பால் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
Read More : செம குட் நியூஸ்..!! நடுத்தர வர்த்தகத்தினருக்கு புதிய வீடு..!! மத்திய அரசு இந்த திட்டம் பற்றி தெரியுமா..?