அமைச்சர்கள் சொல்வதை அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்..
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், “அதிகாரிகளிடம் நான் எப்போதும் சொல்வேன், நீங்கள் சொல்வதைப் போல அரசு செயல்படாது, நீங்கள் “ஆம் ஐயா” என்று மட்டுமே சொல்ல வேண்டும். நாங்கள் (அமைச்சர்கள்) சொல்வதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். எங்களை பொறுத்தே அரசு செயல்படும்..” என்று தெரிவித்தார்..
மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி பேசிய அவர் “ ஏழைகளின் நலனுக்கு எந்தச் சட்டமும் தடையாக இல்லை என்று கூறினார். “ஏழைகளின் நலனுக்காக எந்தச் சட்டமும் தடையாக இருக்காது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய சட்டத்தை 10 முறை மீற வேண்டும் என்றால், நாம் தயங்கக்கூடாது, இதைத்தான் மகாத்மா காந்தி கூறினார்.” என்று தெரிவித்தார்.
உதாரணமாக, 1995 ஆம் ஆண்டில், காட்ரிச்சோலி மற்றும் மேல்காட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் குழந்தைகள் இறந்தனர், கிராமங்களுக்கு சாலைகள் இல்லை என்றும், சாலைகளை மேம்படுத்துவதற்கு வனச்சட்டங்கள் தடையாக இருந்ததையும் அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார்..