தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத்தில், உடனடியாக மத்திய அரசும், கர்நாடக அரசும் நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது நாள் சட்டசபையில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி நேரத்தின்போது பழனி சட்டசபை உறுப்பினர் செந்தில்குமார் தமிழக அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள போகர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட முருகன் கோவிலின் கோபுரத்தை, மறுபடியும் புதுப்பித்து கொடுக்க வேண்டும். மேலும், அங்கே ஒரு திருமண மண்டபத்தை கட்டித் தர வேண்டும் இதற்கு அமைச்சர் ஆவண செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பழனி சட்டசபை தொகுதியின் உறுப்பினர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மிக விரைவில் அந்த ராஜகோபுரம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதற்கு ஆவண செய்யப்படும் என கூறினார் செகர்பாபு.
அதன்பிறகு பேசிய தென்காசி சட்டசபை உறுப்பினர் பழனி நாடார், தென்காசி பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய முன்வர வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சேகர்பாபு, காசி விஸ்வநாதர் ஆலயத்தில், தொல்லியல் துறை மற்றும் மாநில வல்லுனர் குழு அனுமதியோடு, 3.5 லட்சம் செலவில், இதுவரையில், 15 பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் சேகர்பாபு. இத்துடன் கூடுதலாக 1.65 கோடி செலவில், ஒரு ராஜகோபுரமும் அமைக்கப்பட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.