தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து 16வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும் .
தொடர்ந்து 81 வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க பாகிஸ்தான் அணி போராடி முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை, வரும் 24-ஆம் தேதி சந்திக்கிறது. இப்போட்டியின் மூலம் 90-வது கோலை பதிவு செய்த சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மலேசியாவின் மோக்தார் தஹாரியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.