ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அட்டாரியில் உள்ள ஒரே செயல்பாட்டு நில எல்லைக் கடவையை மூடுவது உள்ளிட்ட பல பதிலடி நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்தது. நதி நீர் நிறுத்தப்படுவது போர் நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியதுடன், இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவது மற்றும் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவது போன்ற எதிர் நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொண்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது ஷாபாஸ் ஷெரீப்புக்கு என்ன நடந்தது என்பதும், அவர் எப்போதிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஷாபாஸ் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பாகிஸ்தான் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள ரகசிய தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
அதுவும் ஏப்ரல் 27ஆம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டிப்புடன் ரகசியமாகப் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு இந்த உத்தரவு கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.