ஃபின்டெக் நிறுவனமான Paytm மீது மத்திய ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்க துறையின் முன் பல கேள்விகளை காங்கிரஸ் முன் வைத்துள்ளது. மேலும் பேடிஎம் தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன.? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
கடந்த 7 வருடங்கள் இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் பேடிஎம் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மேலும் அந்த நிறுவனம் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிடுகிறது. அந்த நிர்வாகத்தின் தலைவர் மோடியுடன் செல்ஃபி எடுத்து விளம்பரம் செய்கிறார். அவர் பிரதமர் மோடியின் பக்தர். இப்போது அந்த வங்கிக்கு கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என காங்கிரசின் சுப்ரியா ஷிரினேட் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
பாரதப் பிரதமர் மோடி கடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது பேடிஎம் நிறுவனத்திற்கு ஆதரவளித்தார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அமலாக்கத்துறை ஏன் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறது.? என்று சுப்ரியா ஷிரினேட் அமலாக்கத்துறை மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்திருக்கிறார் .
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ONE97’ கம்பெனியின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா அமலாக்க துறையின் விசாரணையை எதிர்கொள்ளவில்லை என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது கேள்விகளை முன் வைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி ஒரு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி அந்த நிறுவனத்தை முடக்கி இருக்கும் நிலையில் அதன் மீது அமலாக்கத் துறையின் விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? எனவும் காங்கிரஸ் கேள்விகளை முன் வைத்திருக்கிறது.
பேடிஎம் நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பண மோசடி தொடர்பான அமலாக்க துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பேடிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் அதிகாரிகளுடன் நாங்கள் ஒத்துழைத்து இருக்கிறோம் என பேடிஎம் நிறுவனம் தங்களது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்திருந்தது.
மேலும் தங்கள் மீதான குற்றங்கள் அனைத்தையும் சரி செய்து பண மோசடி தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து வருகிறோம் என அந்த நிறுவனம் தங்களது ஒழுங்குமுறை தாக்கல் மனுவில் தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி பேடிஎம் பேமன்ஸ் வங்கியின் உரிமத்தை அடுத்த மாத தொடக்கத்தில் ரத்து செய்ய மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 29 காலக்கெடுவிற்கு பிறகு பேடிஎம் நிறுவனத்தின் மீது வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வங்கி புதிய வாய்ப்புத் தொகையை ஏற்க முடியாது.