சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த இந்தியரை மீட்பதற்காக மக்கள் ரூ.34 கோடி நிதி திரட்டி உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். ஆட்டோ டிரைவராக இருந்த இவர், 2006ல் வேலைக்காக சவுதி சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மகன்மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனை காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
பெற்றோர் தொடுத்த வழக்கில்ரஹீமுக்கு 18 ஆண்டு சிறைதண்டனைக்கு பிறகு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்பாக பல்வேறு அமைப்புகள் வாதிட்டன. இறுதியில் நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில்ரூ. 34 கோடி அளிக்கும்பட்சத்தில் மன்னிப்பு அளிக்க பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு முன்வந்தது. மேலும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் ரூ. 34 கோடி செலுத்தினால் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக கூறப்பட்டது.
சிறுவனின் இறப்புக்கு ஈடாக, இந்திய மதிப்பில் ரூ.34 கோடி பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து அப்துல் ரஹீமின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் இணைந்து நிதி திரட்ட முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஏராளமானோர் நிதி வழங்கினர்.
இருபது நாட்கள் முன்புவரை ரூ.2 கோடி மட்டுமே வசூலானது. ஆனால், கடந்த சில நாட்களாக நன்கொடை குவிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டுவிட்டதாக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ஒரு அப்பாவியை காப்பாற்ற சாதி, மதம், இன பேதம் பாராமல் கேரள மக்கள் ஒன்று திரண்டு செய்திருக்கும் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.