பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களிலும், மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டும் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளை பெறுவதற்காக விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பான செய்திகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் உள்ளனர்.