காஞ்சிபுரம் அருகே ஒப்பந்த தொழிலாளர் காண்ட்ராக்டரிடம் சொந்தக் காதலியை நெருக்கமாக பழக விட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கானகோயில்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கரன். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் பணியினை செய்து வருகிறார். மேலும் இவர் பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அஞ்சுரை சார்ந்த பிரபாகரன் மற்றும் கன்னியப்பன் ஆகியோரிடம் இது தொடர்பாக முறையிட்டு இருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபாகரனும் கன்னியப்பனும் பாஸ்கரனிடமிருந்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இவர்கள் இருவரும் அவர்களது நண்பரான பிரசன்னா பாலாஜி என்பவரிடம் கூறியிருக்கின்றனர். மேலும் சரியாக திட்டமிட்டால் பாஸ்கரன் இடமிருந்து பெரிய தொகையை நாம் பறிக்கலாம் எனக் கூறி மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டிருக்கின்றனர். இதற்கு உடந்தையாக பிரசன்னா பாலாஜி தன் காதலி ரஞ்சிதா என்ற இளம் பெண்ணையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இவர்களது திட்டப்படி ரஞ்சிதா காண்ட்ராக்டர் பாஸ்கரனுடன் சமூக வலைதளங்களின் மூலமாக நன்றாக பழகி அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பின்னர் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தும் நெருங்கி பழக ஆரம்பித்து இருக்கின்றனர்.
அவர்களின் திட்டப்படி ஜனவரி 27 ஆம் தேதி பாஸ்கரனை தொடர்பு கொண்ட ரஞ்சிதா நான் செந்நெறி பகுதியில் காத்திருப்பதாகவும் வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறி இருக்கிறார். இதனை நம்பி சென்ற பாஸ்கரன் அவரை அழைத்துக் கொண்டு சிறு குன்றம் பகுதிக்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பாஸ்கரனை மிரட்டி அவரது ஜி பேயிலிருந்து 28 ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டு இருவரது செல்போனையும் பிடுங்கி சென்று விட்டனர். அப்போது வந்த நபர்கள் ரஞ்சிதாவை தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை . மேலும் இருவரது புகைப்படங்களையும் எடுத்து வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற பாஸ்கர் திருப்போரூர் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் விசாரித்த காவல்துறை ரஞ்சிதா, பாஸ்கருடன் இருந்ததை அறிந்து அவரிடமும் விசாரணை செய்திருக்கிறது. பாஸ்கர் மொபைலில் இருந்து மாற்றப்பட்ட பணம் ரஞ்சிதாவின் செல்போனிற்கு சென்றிருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்ததில் தான் பிரசன்னா பாலாஜி கன்னியப்பன் மற்றும் பிரபாகரன் ஆகியோ இணைந்து தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார். இதனை அடுத்து காவல்துறை நாலு பேரையும் கைது செய்து சிறையிலடைத்தது.