கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி(56) இவர் பாஜக ஆதரவாளர் மேலும் இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் கோவையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்று விருது பெற்றார்.
இந்த நிலையில் தான் இவர் சமூக வலைதளங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்பாக அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கோவை வடக்கு மாவட்ட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஷ் என்பவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அதன் அடிப்படையில், உமா கார்கியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 20ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவரை 2 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மீண்டும் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்க்கியிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு விசாரணை மேற்கொண்டனர். தங்களிடம் வந்த புகார் குறித்து விசாரணை நடத்திய பிறகு அவரை நேற்று காவல்துறையினர் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.