கோவையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர் நடத்தி வந்த மளிகை கடையிலிருந்து 160 கிலோ போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சில காலங்களாகவே போதை பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க மாநில அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்படுவதோடு போதைப் பொருள்களை விற்று வரும் ஆசாமிகளும் கைது செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சின்னம்பாளையம் பகுதியில் ஏராளமான அளவில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறை திலீப் குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் போதை சாக்லேட்டுகள் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர் போலீசார். வாகனத்திலிருந்து மூட்டை மூட்டையாக போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டது .
இதனைத் தொடர்ந்து அவரது மளிகை கடையிலும் சோதனையில் ஈடுபட்டனர் காவல்துறையினர். மளிகை கடையில் கிலோ கணக்கில் போதை சாக்லேட்டுகளை திலீப்குமார் பதுக்கி வைத்திருப்பது காவல்துறையின் சோதனையில் தெரிய வந்தது. மொத்தமாக 120 கிலோ அளவிலான போதை சாக்லேட்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சார்ந்த திலீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் போதை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.