பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையானது ஜாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாட கூடிய சமத்துவ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பண்டிகை என்பதை தாண்டி விவசாயம் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெள்ளையடித்தும் வாசல்களில் பல வண்ண கோலமிட்டும் பொங்கல் பண்டிகையை குதூகலமாக கொண்டாடுவர். தமிழகத்தில் நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்திருக்கிறார். தனது வாழ்த்து செய்தியில் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்திருக்கிறார் அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கலை கொண்டாடும் மக்கள் சமத்துவ பொங்கல் என கோலமிட்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு தெரிவித்துள்ளார். இதுதான் பொதுமக்களிடமிருந்து தனக்கு கிடைக்கும் தித்திப்பான பொங்கல் பரிசு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொங்கல் வாழ்த்து செய்தியோடு திமுக தொண்டர்களுக்கு இரண்டு பணிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதன்படி தாய் நாட்டின் புகழை ஓங்க செய்ய கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதை தெரிவித்த முதலமைச்சர் இந்திய தேசத்தின் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசை உருவாக்க பாடுபட வேண்டும். இந்த இரண்டு கடமைகளும் நமக்கு இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.