பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்..சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.. பிரதமர், பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்..
பிரதமரின் சென்னை வருகையையொட்டி, 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை, விமான நிலையம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது… சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.. பிரதமர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மடத்துக்கு பதில் விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. எனவே சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.. மேலும் பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..