பெரும்பாலும் நாம் எந்த பழங்களை வாங்கினாலும், பேருக்கு தண்ணீரில் நனைத்து விட்டு சாப்பிடுவோம். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, சரியாக கழுவாத பழங்களை சாப்பிடுவதால் பாதிப்பு தான் அதிகம். அதிலும் குறிப்பாக, திராட்சை பழங்களை கட்டாயம் நன்கு கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், திராட்சை சீக்கிரம் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், அதிக பூச்சி மருந்துகள் இருக்கும் இந்த பழங்களை நாம் கழுவாமல் சாப்பிடும்போது அந்த மருந்துகள் நமது உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றது. இதனால் ஹார்மோன் மாற்றங்கள், நரம்பு செயல்பாடு சீர்குலைவுகள் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், திராட்சை உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்களை, என்ன செய்ய வேண்டும், எப்படி முறையாக கழுவ வேண்டும் என்று கட்டாயம் தெரிந்துக் கொள்வது அவசியம். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். அந்த வகையில், வாங்கி வந்த பழங்களை எப்படி முறையாக கழுவுவது என்பதை தெரிந்துக்கொள்ள இந்தப் பதிவை தொடர்ந்து படியுங்கள்..
மற்ற பழங்களை விட அதிக அளவு செயற்கை வண்ணங்கள் மற்றும் ரசாயனங்களை கலக்கப்படுவது திராட்சையில் தான். அது மட்டும் இல்லாமல், திராட்சையில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகம் சேர்க்கப்படுகிறது. இதனால் திராட்சையை கடைகளில் இருந்து வாங்கி வந்த உடன், வெறும் தண்ணீரில் கழுவுவதற்குப் பதில், உப்பு நீரில் ஊற வைத்து கழுவ வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கேகா மொண்டல் கூரியுள்ளார்.
உப்பு நீரில் திராட்சை பழங்களை அதிக நேரம் ஊறவைப்பதால் திராட்சையில் உள்ள ரசாயனங்கள் பெருமளவில் குறைந்து விடும். அது மட்டும் இல்லாமல், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரில் வீட்டிலேயே ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். பின்னர் அந்த கரைசலில், திராட்சையை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர், ஊறவைத்த திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கலாம். சம நீங்கள் பேக்கிங் சோடாவிற்கு பதில் வினிகரையும் பயன்படுத்தலாம். இதற்கு, சம அளவு தண்ணீர் மற்றும் வினிகரை கலந்து, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இப்போது இந்த கலவையில் திராட்சைக் கொத்துக்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவி சாப்பிடலாம். திராட்சை பழங்களை இப்படி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது.