வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்திய தவெகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய சுமார் 2000 தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மட்டும் 6 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களை பாதிக்கும் வக்பு சட்டத் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகம் அருகே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள், இஸ்லாமிய பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது வக்பு சட்டத் திருத்தத்தை திரும்ப பெறகோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போதே தவெகவினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்திய தவெகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய சுமார் 2000 தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.