காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டை விட தனது ஆஸ்தான குடும்ப தொகுதியான ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும். இதன் பின்னர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தும். எனவே கடந்த முறை வயநாடு எம்பியாக செயல்பட்ட ராகுல் காந்தி இந்த முறை வயநாட்டி எம்பியாகவே தொடர்வாரா? அல்லது வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக செயல்படுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமது குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ராகுல். வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறாராம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டை விட தனது ஆஸ்தான குடும்ப தொகுதியான ரேபரேலியை தேர்வு செய்ய உள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.