கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரமும், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் சட்டப்பேரவையில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்த குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில் , பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமினில் வெளி வராத வகையிலும், 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.