மக்கள் அனைவரும், 2025 ஆம் ஆண்டுக்குள், தாங்கள் உணவில் சேர்க்கும் உப்பின் அளவை 30% குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் எனப்படும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக எச்சரித்துள்ளது. அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 10.8 கிராம் உப்பை உட்கொள்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் அளவான 5 கிராமை விட இரண்டு மடங்கு அதிகமாதனதாகும். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு அதிகமாக நாம் உட்கொள்கிறோம். உணவு பொருட்கள் ஏற்படுத்தும் பல நோய்களில் சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக்கொடுமையானது. இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பலநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 5 சதவிகிதம் மட்டுமே கட்டாய மற்றும் விரிவான சோடியம் குறைப்பு கொள்கைகளால் பாதுகாக்கப்படுகிறது எனவும் 73 சதவிகித நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சோடியம் இருப்பதை இந்தியா கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கட்டாய நடவடிக்கையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. எனவே உணவில் உப்பை குறைத்து சாப்பிடும் முறையை நாம் சரியாக கையாண்டால் வருகிற 2030 -ஆம் ஆண்டில் 70 லட்சம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொற்று நோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதை குறைக்கும் விதமாக இத்திட்டம் அறிமுகப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், உப்பை குறைப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது. அதன்படி, பொதுவாக சமைக்கும் போது பாதியளவு உப்பு சேர்த்து, சமைத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜை மீது உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள வேண்டாம். உப்பு குறைவாக இருந்தாலும் அதனை அபப்டியே சாப்பிட பழக வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கி விட வேண்டும். உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.