பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உட்பட 492 பாலிடெக்னிக் செயல்பட்டு வருகின்றன. சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் கணினி பொறியியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்த நிலையில் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிவரை தொடர்ந்து (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும். செய்முறை தேர்வுகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள்முன்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு பணிகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.