ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact Check, 1,000 ரூபாய் நோட்டுகளைப் பற்றிய போலிச் செய்திகளுக்கு எதிராக மக்களை எச்சரித்தது. “ஜனவரி 1 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் வரும் என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்று கூறுகிறது. இந்தக் கூற்று போலியானது. தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை அனுப்ப வேண்டாம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் ரூ.2000 நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவைத் தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்று.
