11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10,000 ரூ.7,000/- மற்றும் ரூ.5,000, என ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பெற்று வருகிறது.
இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும்மாநிலப்போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். 2022 – 2023-ஆம் ஆண்டுக்கான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 27.06.2023 புதன்கிழமை அன்று சேலம் அரசு சட்டக் கல்லூரியில் முற்பகல் 9.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி / கல்லூரிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் / கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று பரிந்துரையுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர்வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவருக்குப் பயணப்படி வழங்கப்பட மாட்டாது.