fbpx

“கலைஞரின் கனவு இல்லம்” புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக அனைவருக்கும் வீடு என்ற திட்ட கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் ’குடிசையில்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் டான்செம் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்துக்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல்மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என 4 தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசால் ரூ.1,051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.

தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1,451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டுக்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Rs. 3.50 lakh per house to build one lakh new concrete houses

Vignesh

Next Post

தவறுதலாக கூட இந்த 5 இடங்களில் துளசி செடியை வைக்காதீங்க.. வறுமை, துரதிர்ஷ்டம் வரலாம்...

Thu Dec 19 , 2024
In this post, you can see where Tulsi plants should not be placed.

You May Like