இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் உலக வங்கி பாகிஸ்தானுக்கு கடன் ஒதுக்கீடு செய்தது தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சூட்டு கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதனால் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் உலக வங்கி பாகிஸ்தானுக்கு கடன் ஒதுக்கீடு செய்தது தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தனது கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, உலக வங்கியிடமிருந்து 108 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக பெற்றுள்ளது. இந்த நிதி பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள இரண்டு முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாடு (KITE) மற்றும் கிராம அணுகல் திட்டம் (KPRAP). இது உலக வங்கியின் கண்டிஷனுடன் கொடுக்கப்பட்டாலும், பாகிஸ்தானின் ராணுவத்துக்கான பயன்படுத்துதலுக்கு இது வழிவகுக்கும் என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த கடன் ஒதுக்கீடு, பாகிஸ்தான் நிதி நிலையை பலப்படுத்துமா அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதாக இருக்கிறதா என்பதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தானின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது.