ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுவை ஏப்ரல் 18-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உள்ளது.
ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் இந்து திருமண சட்டம் 1955, கிறிஸ்தவ திருமண சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டம் 1936, சிறப்பு திருமண சட்டம் 1954, வெளிநாட்டுத் திருமண சட்டம் 1969 ஆகியவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை தான் அங்கீகரிக்கின்றன.
திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் நடக்க வேண்டும் என சட்டங்கள் சொல்கின்றன. ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்வது சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் குடும்ப அமைப்புகளை தாண்டி, இதுபோன்ற திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கூடாது. எனவே, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை ஏற்க கூடாது என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு மனுவை எடுத்துக் கொள்ள உள்ளனர்.