பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் செயல்படக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, சிறப்புத் தேவை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதனைத்தொடர்ந்து, 5, 8, 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கத் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.