ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று குழந்தை நல அலுவலர்கள், கடலாடி வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேல் விசாரணை, இன்று நடக்க இருந்தது. இந்நிலையில், தலைமையாசிரியர் சேட் அயூப்கான் வழக்கம் போல் நேற்று இரவு மாரியூரில் உள்ள தனது வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். ஆனால் இன்று காலை சேட் அயூப்கான் நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை.
இதனால் அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர் தனது கணவனை எழுப்புவதற்கு அவரின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன அவரது மனைவி, உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, தலைமையாசிரியர் சேட் அயூப்கான் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பரமக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமன் இது குறித்து கூறும்போது, ‘தலைமையாசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததால் நேற்று குழந்தைகள் நல அலுவலர், கடலாடி வட்டார கல்வி அலுவலர் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணை அறிக்கை இன்னும் எங்களிடம் சமர்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்’ என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.