தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும். இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். திறனறித் தேர்வு 15.10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை இணையதளம் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை இன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID /Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து வழங்கவும் தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு முதல்வர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.