இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “பன்னாட்டுடயாபெடிஸ் அமைப்பின் அறிக்கையில், உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினர் வகை-1 நீரிழிவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் இன்சுலின் மருத்தினை ஊசி வழியே செலுத்துதல், நாள்தோறும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இத்தகைய வகை-1நீரிழிவு குறைபாடுடைய மாணவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பள்ளியில் செலவிடுவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவை சோதித்து அறிதல், இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், வழக்கமான உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரங்களில் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுதல், மருத்துவர் பரிந்துரைப்படி நீரிழிவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவை தேவைப்படலாம். எனவே, இத்தகைய மாணவர்கள் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்வு நேரம் மற்றும் பள்ளி நேரங்களில் வகுப்பாசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்.மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி அவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.