ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஃபரிதாபாத், பல்வால், ஃபதேஹாபாத் மற்றும் ஹிசார் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும். எனவே இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல், மக்கள் தொடர்பு மற்றும் மொழிகள் துறை இயக்குனரகம் தனது உத்தரவில்; ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி பதவிகளுக்கு நவம்பர் 22ம் தேதியும், பஞ்சாயத்து மற்றும் சர்பஞ்ச் பதவிக்கு நவம்பர் 25ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஃபரிதாபாத், பல்வால் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் அதிகார வரம்பில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு பொது விடுமுறை என கூறியுள்ளது.