தமிழகத்தில் ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாரத சாரண சாரணியர் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றம் நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் சாரண, சாரணியர் பங்கேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த பெருந்திரளணி முகாம் நேற்றுடன் முடிவடைந்தது.
நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்; தமிழகத்தில் 12 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 80 லட்சம் பேர் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். அதாவது, 8-ல் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு என்பது அதிகமாகத்தான் இருக்கும். இந்தியாவில் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்துள்ளன. 2000-வது ஆண்டில் சாரணர் இயக்கப் பொன்விழா பெருந்திரளணியை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தினார். வைரவிழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கிறேன்.
பள்ளி மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையிலும், மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும் தமிழக சாரண இயக்கத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என்றார்.